கோல சிலாங்கூர்:
கட்டாத ஆலய நிலங்களை மீண்டும் எடுத்துக் கொள்ளும் சிலாங்கூர் அரசின் பரிந்துரை அர்த்தமற்றது.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு வழங்கப்பட்ட நிலத்தை மேம்படுத்தாவிட்டால், அதற்கான ஒப்புதலை திரும்பப் பெறுவதாக சிலாங்கூர் அரசாங்கம் பரிந்துரைந்துள்ளது.
சிலாங்கூர் ஊராட்சி, சுற்றுலா துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் இதனை கூறியுள்ளார்.
அவரின் இந்த பரிந்துரையை மஹிமா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
காரணம் ஆலயத்திற்கு நிலம் கொடுத்தால் மட்டும் போதாது. ஆலயம் கட்டுவதற்கு போதுமான நிதியும் ஒதுக்கப்பட வேண்டும்.
ஒரு ஆலயம் கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல.
ஆக ஆலயம் கட்டவில்லை என்பதற்காக அந்த இடத்தை எடுத்துக் கொள்வது தவறான பரிந்துரையாகும்.
கட்டாத ஆலயத்தை பற்றி பேசுகின்றனர். ஆனால் மாநிலத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றன.
குறிப்பாக பல ஆலயங்கள் நில பிரச்சனையை சந்தித்து வருகின்றன.
இந்த பிரச்சனைகளுக்கு மாநில அரசும் சம்பந்தப்பட்ட ஆட்சி குழு உறுப்பினரும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதுதான் என்னுடைய கேள்வியாகும்.
ஆகவே பரிந்துரைகளையும் திட்டங்களையும் கொண்டு வருவதற்கு முன் அது தொடர்பான முழு ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும்.
இது போன்ற ஆலய நிலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில அரசுடன் இணைந்து செயல்பட மஹிமா தாயாராக உள்ளது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்