Event Description

ஈபிஎப் பணம் வாயிலாக காப்புறுதி கட்டணம் செலுத்தும் திட்டம் மக்கள் ஓய்வூதிய சேமிப்புகளை இழக்கலாம்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர் - 

ஈபிஎப் பணம் வாயிலாக காப்புறுதி கட்டணம் செலுத்தும் திட்டம் மக்கள் ஓய்வூதிய சேமிப்புகளை  இழக்கும் அபாயம் உள்ளது.

டிஎஸ்கே சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான டத்தோ என். சிவக்குமார் இதனை கூறினார்.

சுகாதார காப்பீட்டு பிரிமியம் செலுத்துவதற்கு ஈபிஎப் கணக்கு 2இன் பணத்தை மக்கள் பயன்படுத்தலாம் என அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

இந்த திட்டத்தால் மக்கள் ஓய்வூதிய சேமிப்புகளை  இழக்கலாம். இதனால் இந்த திட்டத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த திட்டம் பி40, எம்40 பிரிவு மக்கள் தரமான சுகாதார சிகிச்சையை விரைவாகப் பெற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதே வேளையில் பணி ஓய்வுக்குப் பிறகு பங்களிப்பாளர்களின் நிதி நிலைத்தன்மையில் நீண்டகால தாக்கங்களை குறைத்து மதிப்பிட முடியாது.

ஈபிஎப் சேமிப்பு மக்களின் முதுமைக்கு ஒரு பாதுகாப்பாகும்.

அப்பணத்தை கொண்டு மாதாந்திர  சுகாதார காப்பீட்டு பிரிமியங்களைச் செலுத்துவதால் பங்களிப்பாளர்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும்போது முக்கியமான நிதியை இழக்க நேரிடும்.

காப்பீட்டு பிரிமியங்களின் கட்டணம் வயது, சுகாதார நிலைக்கு ஏற்ப அதிகரிக்கிறது.

இதனால் ஈபிஎப் கணக்கு 2 நிதியை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது நீண்ட காலத்திற்கு சுமையாகிறது.

குறிப்பாக பங்களிப்பாளர்கள் முழு குடும்பத்திற்கும் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்தால் அவர்கள் ஆயிரக்கணக்கான ரிங்கிட்களை செலவிட நேரிடும். 

இது ஒரு முறை செலுத்தும் கட்டணம் அல்ல. மாறாக அவ்வப்போது ஒரு தொகையை செலுத்த வேண்டும். 

ஆகையால் இது போன்ற குறுகிய காலத் தேவைகளுக்கான நிதியாக ஈபிஎப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா? என்று டத்தோ சிவக்குமார் கேள்வி எழுப்பினார்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண வருமானம், வயது, குடும்பத்திற்கு ஏற்ப அரசாங்கம் தற்போதுள்ள காப்பீட்டுத் திட்டங்களை மலிவு விலையிலும் மறுசீரமைக்க வேண்டும்.

இந்த பரிந்துரையை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.