கோலாலம்பூர்:
எஸ்எஸ்டி விரிவாக்கம் நடவடிக்கையில் வழிபாட்டுத் தலங்களுக்கு விலக்களிக்க வேண்டும்:
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.
எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை, சேவை வரி விரிவாக்கத்தை அரசாங்கம் வரும் ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு கொண்டு வரவுள்ளது.
இதில் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் அவலநிலைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
புதிய எஸ்எஸ்டி விரிவாக்கம் நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதனால் அனைத்து இனங்கள், மதங்களைச் சேர்ந்த மலேசியர்களிடையே ஒற்றுமையின் தூணாக இருக்கும் ஆன்மீக அம்சத்தை அரசாங்கம் புறக்கணிக்க கூடாது.
அடிப்படை அன்றாடத் தேவைகளுக்கு விற்பனை வரியிலிருந்து தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும் என்ற நிதி அமைச்சின் உறுதிமொழியை மஹிமா பாராட்டுகிறார்.
இது மக்களின் நலனில் அரசாங்கத்தின் அக்கறையைக் காட்டுகிறது.
இருப்பினும் வழிபாட்டுத் தலங்கள் உட்பட கட்டுமானத் துறையையும் உள்ளடக்கும் வகையில் சேவை வரியின் வரம்பை விரிவுபடுத்துவதன் தாக்கத்தை அரசாங்கம் ஆராய வேண்டும்.
ஆண்டுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் வரம்பு மதிப்பை எட்டும் ஒப்பந்தக்காரர்களுக்கு 6 சதவீத வரி விதிக்கப்படும்.
இது வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுமானத் திட்டங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சிறு, நடுத்தர ஒப்பந்ததாரர்கள் மீதான சுமையைக் குறைக்க அரசாங்கம் அதிக வரம்பை நிர்ணயித்திருந்தாலும், வெளிப்படையாக விலக்கு அளிக்கப்பட்ட பட்டியலில் வழிபாட்டுத் தலங்கள் சேர்க்கப்படவில்லை.
வழிபாட்டுத் தலங்கள் வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல. அவை சமூக ஒற்றுமை, நலன், நல்வாழ்வின் மையங்கள்.
குடியிருப்புகள், வீட்டுவசதி தொடர்பான பொது வசதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டால், வழிபாட்டுத் தலங்களுக்கும் ஏன் இதே போன்ற விலக்கு அளிக்கக் கூடாது என்று டத்தோ சிவக்குமார் கேள்வி எழுப்பினார்.
- பார்த்திபன் நாகராஜன்